Saturday, March 13, 2010

letter to CM on Vikatan

மாண்புமிகு தமிழக முதல்வர், கதைவசன கர்த்தா, சினிமா தயாரிப்பாளர், பத்திரிகை அதிபர், டி.வி. அதிபர், எழுத்தாளர், கலைஞர் கருணாநிதி அய்யா அவர்களுக்கு வணக்கமுங்க.



''சிம்மாசனத்துல உக்காந்தோமா... பாராட்டு விழாக்கள்ல பங்கெடுத்தோமா... ஆட்டம், பாட்டத்தைப் பார்த்து ரசிச்சோமானு இருக்குற என்னை, ஏய்யா எதை எதையோ சொல்லி வம்புக்கு இழுக்குறே'னு நீங்க பல்ல நறநறக்கறது நல்லாவே கேக்குதுங்கையா.



என்ன செய்ய... அப்பப்ப ஆளாளுக்கு எதையாச்சும் உளறிக் கொட்டி, என்னோட பொறுமையை சோதிச்சுடறீங்களே!



சமீபத்துல நடந்த ஒங்க கட்சி பொதுக்குழுக் கூட்டத்துல, மாஜி மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன், ''விவசாயத்துக்கு ஆள் கெடைக்காம விவசாயிக வேதனைப்படுறாங்க. அதுனால கேரளாவுல செய்ற மாதிரி 'மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு போற ஆளுகள்ல பாதிபேரை விவசாய வேலைக்கு அனுப்பலாமே''னு ஒரு யோசனை சொல்லப் போயி... அம்மணியை எகிறித் தள்ளிப்புட்டீங்களாமே எகிறி!



''உங்களுக்கு இன்னும் 'மிட்டா மிராசு'னு நெனப்பாக்கும். நீங்களே வயலுல எறங்கி வேலை பார்த்துக்க வேண்டியதுதானே. இன்னும் எத்தன நாளைக்குதான் ஏழைங்கள கூலியா... கொத்தடிமையா நடத்துவீங்க?'' அப்படினு சிவப்புச் சிந்தனையோட சீறிப்புட்டீங்களாமே... சீறி!



அய்யா, நீங்க சொன்னது வாஸ்தவம்தான். 1950-ம் வருஷத்துக்கு முன்ன கொஞ்சம்பேரு அப்படித்தானுங்க இருந்தாங்க. வெள்ளையும் சொள்ளையுமா... கழுத்துல முறுக்குச் சங்கிலி போட்டுக்கிட்டு ஒருத்தரு குடை பிடிக்க... ஒருத்தரு எச்சில் துப்பற லோட்டா பிடிக்க... வரப்பு மேல வலம் வந்தது நெசம்தானுங்க. ஆனா, இப்ப நெலமை அப்படியா இருக்கு?





வாரிசுக யாரும் விவசாயத்துப் பக்கம் எட்டி பாக்காததால, பாதி பண்ணையாருங்க நிலத்தை வித்துட்டோ, குத்தகைக்கு விட்டுட்டோ பட்டணத்துல பட்டறைய போட்டுட்டாங்க. மீதியிருக்கற பெருங்கொண்ட விவசாயிகளும் மெஷினை வாங்கிப் போட்டு, வெள்ளாமை செய்றாங்க. உண்மையிலயே வேலைக்கு ஆள் கிடைக்காம கஷ்டப்படுறது எங்கள மாதிரி ரெண்டு ஏக்கர், அஞ்சு ஏக்கர், எட்டு ஏக்கர் விவசாயிகதாங்க.

ஆனா, ஒரு காலத்துல சிவப்பு சித்தாந்தம் பேசுனவங்கள்லாம் இன்னிக்கு கோடி கோடியா பணம் புரளுற பலப்பல தொழிலுங்களோட அதிபர்களாயிட்டாங்க. ஆனா, நாங்கதான் மருந்துனு நினைச்சு துப்பவும் முடியாம, கசக்குதேனு நினைச்சு முழுங்கவும் முடியாம வெள்ளாமை செஞ்சு வேதனைப்பட்டு நிக்கிறோம்யா. அதுக்கு ஆறுதலா, நல்லதா நாலு வார்த்தை சொல்லாட்டியும் பராவயில்ல. சொல் அம்பால குத்தாதீங்க சாமீ. சுட்டெரிக்கும் வெயில்ல வெந்து, நொந்து கட்டெறும்பு கணக்கா கறுத்துக் கெடக்கற விவசாயிகள 'மிட்டா, மிராசு'னு பேசி வம்புக்கு இழுக்கறீங்களே... உங்களுக்கே நல்லா இருக்கா?




ஒரு பேச்சுக்கு, நீங்க சொன்ன மாதிரி அவனவன் வேலையை அவனவனே பார்க்கணும்னு வெச்சுக்குவோம். எந்தத் தொழிலுங்கய்யா நாட்டுல நடக்கும்? உங்களோட ஆதர்ச சினிமா தொழிலையே எடுத்துக்குவோம். உங்க மூன்றாம் தலைமுறை வாரிசுங்க அவங்களாவா படம் நடிக்குறாங்க. கூலி கொடுத்து நடிகைங்களோட இடுப்ப ஆட்ட வெக்கறது மட்டும் கொத்தடிமையில்லையா? கிளாப்பு, மேக்கப்பு, பேக்கப்பு, லைட்பாய், கேமராமேன், எடிட்டர், டைரக்டர், போஸ்டர் ஒட்டுறதுனு' எல்லாத்தையும் 'கிளவுட் நைன் மூவீஸ்' தயாநிதி அழகிரியும், 'ரெட் ஜெயன்ட்' உதயநிதி ஸ்டாலினுமா செய்றாங்க. கூலிக்கு ஆளுகளை வெச்சுதானே வேலை வாங்கறாங்க.



இவங்கள்லாம் செய்றது கொத்தடிமை இல்லியா? அவங்கள்லாம் செய்தா... ஆகா ஓகோனு பாராட்டுப் பத்திரம் வாசிப்பீங்க. ஆனா, ஒரு சம்சாரி, தன்னோட தோட்ட வேலைக்கு ஆள் தேடினா... குதர்க்கம் பேசுவீங்க? ஒங்க குடும்பத்துக்கு ஒரு நியாயம்... ஊர் குடியானவனுக்கு ஒரு நியாயமா?



'பாழாப்போன விவசாயத்தை விட்டுட்டு என்கூட டவுனுக்கு வா. நான் இங்க இருக்க முடியாது'னு எங்க வாரிசுக சொல்லிட்டுப் போயிட்டாங்க. அவங்களச் சொல்லியும் குத்தமில்ல. அப்பன் படுற கஷ்டத்தை நேர்ல பாத்த எந்தப் புள்ளை அதே கஷ்டத்துல கால வெக்கும். வாரிசுக உதவியும் இல்லாம, கூலி ஆளுக உதவியும் இல்லாம ஒண்டியா நிக்குற நாங்கதான் வெள்ளாமையைப் பார்த்துக்கிட்டிருக்கோம். ஆனா, எல்லா வேலையையும் நாங்களே பாக்க முடியுமா..? உதாரணமா உங்க கட்சியில போஸ்டர் ஒட்டுறதுக்கு கனிமொழியா களி (பசை) காய்ச்சுறாங்க, அழகிரியா ஏணியில ஏறி போஸ்டர் ஒட்டுறாரு. ஸ்டாலினா கொடியை ஊன்றாரு. அது முடியாதுல்ல. அது மாதிரிதானே எங்களுக்கும். ஆனா, எங்கள மட்டும் எஜமான்... மிட்டா மிராசு'னு எகத்தாளம் பேசுறது நியாயமா?



ஏற்கெனவே எங்க பொழப்பு நாய் பொழப்பா இருக்கு. நெல்லு போட்டா... தண்ணி பத்தறது இல்ல. கரும்பு போட்டா... மில்லுகாரன் காசு கொடுக்கறது இல்ல. சும்மா போட்டா... தரிசு நிலம்னு பன்னாட்டு கம்பெனிக்கு பட்டா போட்டு கொடுத்துடுறீங்க. இப்படி ஆளாளுக்கு வெறுப்பேத்துனா... வயல்ல மரத்தை நட்டுபுட்டு, நாலு ஆட்டுக்குட்டியை வாங்கி வுட்டுட்டு மல்லாக்க அடிச்சு படுத்துக்குவோம். அப்புறம் ஒரு ரூபாயில்ல... ஓராயிரம் ரூபாய் கொடுத்தாகூட சாப்பிட சோறு கிடைக்காது.



அதனால... நக்கல், நையாண்டி எல்லாத்தையும் எதிர்க்கட்சிக்காரங்கிட்டயும்... ஒங்கள மதிக்காத சினிமாக்காரங்ககிட்டயும் மட்டும் வெச்சுக்கோங்க. வேற வழியில்லாம ஒங்க ராஜ்ஜியத்துல புழு, பூச்சிகளா வாழற எங்ககிட்ட வேணாமுங்க. 'சாதுமிரண்டா காடு கொள்ளாது'னு ஒங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்ல!



சூப்பர் நான் ரொம்ப லைக் பண்ணேன்